×

பெரியபாளையம் அருகே புகையான் நோயால் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, ஜன. 13: பெரியபாளையம் அருகே புகையான் நோய் தாக்குதலில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி நாசம் அடைந்துள்ளதால், விவசாயிகள் நஷ்டஈடு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சியில் 2 ஆயிரம்   ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு  வடகிழக்கு பருவ மழை பொய்த்துப்போனதால் நெல் பயிர்களுக்கு பாய்ச்ச போதிய அளவு தண்ணீர் இல்லை. மேலும், தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நெற்பயிர்களில் ஒருவித வைரஸ் பூச்சிகள் பரவி புகையான் நோய் மற்றும் கொளை நோய்  தாக்கியுள்ளது. இந்த  நோய் தாக்குதல் கட்டுப்படுத்த முடியாததால் நெற்பயிர்களில் பால் பிடித்து நெற்கதிர் முற்றிலும் கருகி பதராக மாறிவிட்டது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
வெள்ளியூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஏக்கர் நிலம் உள்ளது. இதில்,  ஆயிரம் ஏக்கருக்கு மேல் நோய் தாக்கியுள்ளது.  ஒரு ஏக்கருக்கு ₹ 25 ஆயிரம் வரை செலவு செய்து கடந்த 4 மாதங்களாக நெற்பயிர் சாகுபடி செய்தோம். அறுவடை செய்ய ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பயிர்களில் புகையான் நோய் மற்றும் கொளை நோய் தாக்கியுள்ளது. இதனால், ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை விளைய வேண்டிய நிலத்தில் 2 முதல் 6 மூட்டைகள் மட்டுமே கிடைக்கிறது.  அறுவடை செய்யும்  கூலி கூட கிடைக்க வில்லை.

 திருவள்ளூர், ஊத்துக்கோட்டை,  பெரியபாளையம், பாக்கம்  ஆகிய பகுதிகளில் விதை நெல் விற்பனை மையத்திலும், ஒரு சிலர் வேளாண்மை துறை அலுவலகத்திலும் விதை நெல் வாங்கி பயிர் செய்து, அதை வேளாண்மை துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படிதான் பயிர் செய்கிறோம். ஆனால்,  நோய் தாக்கி பயிர்கள் அனைத்தும் பதர்களாக மாறி வருகிறது. கூட்டுறவு சங்கத்தில் மட்டுமல்லாமல் தனியாரிடமும் கடன் வாங்கி பயிர் செய்துள்ளோம். ஆனால், பயிர்களில் புகையான் நோய்  தாக்கியுள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட  நெற்பயிர்களை பார்வையிட எந்த அதிகாரிகளும் வரவில்லை. ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயிர்களுக்கு  இன்ஸ்சுரன்ஸ் போட்டுள்ளனர். ஒரு சிலர் போடவில்லை.  எனவே அரசு, புகையான் மற்றும் கொளை நோய் தாக்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : paddy fields ,Pugayan ,Periyapayalam ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை